Friday, April 29, 2016

thumbnail

செல்வங்களை வாரி வழங்கும் வரலட்சுமி விரதம்

மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந் துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.

ஸ்ரீ(செல்வம்), பூ(பூமி), சரஸ்வதி(கல்வி), ப்ரீதி(அன்பு), கீர்த்தி(புகழ்), சாந்தி(அமைதி), துஷ்டி(மகிழ்ச்சி), புஷ்டி(பலம்) ஆகிய எட்டு சக்திகளும் அஷ்ட லட்சுமிகள் என்று அழைக் கப்படுகிறார்கள். அஷ்ட லட்சுமிகளும் திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவரை லட்சுமிபதி என அழைப்பர். இந்த சக்தி களையே லட்சுமியாக உருவகித்து வழிபடுகிறார் கள். இந்த சக்திகளின் மூலமாகத்தான் கல்வி, செல்வம், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து வரங்களும் பெறப்படுகின்றன.

சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். சிலர் சிறு மண்டபம் அமைத்து அதில் கலசம் வைத்துப் பூஜை செய்வார்கள்.

கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.

வரலட்சுமி விரதம் பற்றிய புராணக் கதை ஒன்றைக் காண்போம்.


பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.

தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம்.

THANKS - கே. சுவர்ணா

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email