Spiritual Information Storage

Header Ads

Tuesday, May 3, 2016

உலகின் முதல் சிவாலயம்
தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன. இவற்றில் 276 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றவை. இந்த பழம்பெரும் சிவத்தலங்களில் மகத்துவமும் தனித்துவமும் நிறைந்தது உத்தரகோசமங்கை எனும் திருத்தலமாகும். இந்த திருத்தலம் ராமநாதபுரத்துக்கு மிக, மிக அருகில் உள்ளது.

சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான். இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது. சமயக்குறவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை இத்தலத்தில் கழித்தார். அவர் தன் பாடலில், ‘சிவன் உண்பதும், உறங்குவதும் உத்தரகோசமங்கை தலத்தில்தான்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு சிவபெருமான் இத்தலத்தில் வைத்துதான் ரகசியமாக சொல்லி கொடுத்தார் என்பார்கள். அதுபோல பார்வதிக்கு நாட்டியக்கலையை ஈசன் இங்கு ரகசியமாக சொல்லிக் கொடுத்தார் என்பார்கள். ‘மண் முந்தியதோ, மங்கை முந்தியதோ‘ என்பார்கள். அந்த அளவுக்கு உலகிலேயே பழமையான முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது.

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். அதனால் இந்த ஊருக்கு ‘உத்தரகோசமங்கை‘ என்ற பெயர் தோன்றியது என்று சொல்கிறார்கள்.

அதாவது உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது என்கிறார்கள். ஆனால் இத்தல பெயர் விளக்கத்துக்கு வேறொன்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம். கோசம் என்றால் ரகசியம். மங்கை என்றால் பார்வதி என்று பொருள்.

பார்வதிதேவிக்கு ஈசன் ரகசியமாக வேதத்தை உபதேசம் செய்த இடம் என்ற அர்த்தத்தில் இத்தலம் உத்தரகோச மங்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்கிறார்கள். இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர். அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது.

மங்களநாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும். மாணிக்கவாசகர் இத்தலத்தில் சிவலிங்க வடிவிலும், நின்ற கோலத்திலும் காட்சி தருகிறார். ‘நீத்தல் விண்ணப்பம்’ என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் பாடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள். மேலும் ராவணன்- மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

இங்குள்ள நடராஜ பெருமான் ஐந்தரை அடி உயரம். முழுவதும் மரகத திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அதுவும் 32 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்படும்.

ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சந்தனக் காப்பு செய்யப்பட்டு, நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அந்தச் சந்தனக் காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜர் காட்சி தருவார். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்தலத்தில் காலடி எடுத்து வைத்தாலே போதும், நம் மீதான தோஷங்கள் விலகி ஓடிவிடும்.

மங்களநாதரை 5 தடவை வலம் வாருங்கள்


உத்தரகோச மங்கை மங்களநாதரை நாம் வழிபடும் காலத்துக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். அதிகாலையில் மங்களநாதரை 5 தடவை வலம் வந்தால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். நன்பகலில் மதியம் நேரத்தில் மங்களநாதரை 5 தடவை வலம் வந்தால் பிறவிப் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

சாயங்காலம் மாலை நேரத்தில் மங்களநாதரை 5 தடவை வலம் வந்தால் ஆயுள் கூடும். நோய்கள் தீரும். உடல் நலம் மேம்படும். செல்வம் பெருகும். தொழில் மேம்பாடு பெறும். எனவே உத்தரகோச மங்கை ஆலயத்துக்கு செல்லும் போது மங்களநாதரை 5 தடவை வலம் வந்து வழிபட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top