Benefits Of Walking


எப்படி செய்யவேண்டும்? நடைப்பயிற்சியை எப்போது செய்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு. அதிலும் காலையில் மேற்கொள்கிற நடைப்பயிற்சியினால் அபரிமிதமான பலன்கள் உள்ளன’ என்கிறார் பொது மருத்துவரான அரசு மோகன். எல்லோராலும் எளிதாக செய்ய

முடிகிற நடைப்பயிற்சி பற்றி தொடர்ந்து நம்மிடம் அவர் விளக்கியதிலிருந்து... ஒரு நாளின் ஆசீர்வாதம்! சூரிய உதயத்தைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட அவசர வாழ்விலும் அதிகாலையில் கண் விழிப்பவர்கள் பாக்கியவான்கள். அதனால்தான் ‘காலை நடைப்பயிற்சி அந்த நாளுக்கான மொத்த ஆசீர்வாதம்’ என்கிறார் அமெரிக்கக் கவிஞரான ஹென்றி டேவிட். கொஞ்சம் செல்போனை கைவிட்டு... நான்கு சுவர்களைக் கடந்து... மனித அதிர்வுகளுக்கு அப்பால்... இயற்கையிலிருந்து உருவான மனிதன் இயற்கைக்கே திரும்பும் பாதை அதிகாலைதான். கொஞ்சம் வேடிக்கை பாருங்கள்! காலை நடைப்பயிற்சி ஏன் நல்லது என்பதற்கு முன்னால் காலைவேளையே எத்தனை அழகானது என்பதை கொஞ்சம் கவனியுங்கள். கண் விழித்தால் பளிச்சென்று புத்தம் புதிய ஒரு நாள்... பறவைகளின் பாடலையும் வெயிலற்ற வெளிச்சத்தையும் இதமான காற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக உதயமாகும் சூரியனையும் விடைபெறும் நிலவையும் இன்னும் மிச்சமிருக்கும் நட்சத்திரங்களையும் பனிமழையில் நனைந்திருக்கும் மலர்களையும் கொண்ட ஒரு பொழுது எப்படி இருக்கிறது? இத்தனை ஒரு ரம்மியமான தருணத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தாலே நோய்கள் நம்மை விட்டுஓடிப் போய்விடாதா? புத்தம்புது காலை! நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்த பிறகு வருகிற புத்தம்புதிய நாள் என்பதால் மனம் அமைதியாக இருக்கும். கவனச்சிதறல்கள் இருக்காது. மனிதர்கள், வாகனங்களின் இரைச்சல்கள் இருக்காது. காற்று மாசு இருக்காது. இதனால்தான் நடைப்பயிற்சிக்கு காலைவேளையே சரியான நேரம் என்கிறோம். முக்கியமாக ரத்த ஓட்டத்தை சீராக்கும் அட்ரினலின், கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் நாள் முழுவதும் உடலில் சுரந்தாலும் காலையில்தான் புதிதாக, அதிகமாக சுரக்கும். இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது பல நன்மைகளைக் கொடுக்கும். நோய்களற்ற ஒரு வாழ்க்கை ‘காலையில்தான் வான்வெளியில் புத்தம்புதிய பிராண வாயு அதிகமாக இருக்கும். இதனால் நுரையீரலுக்கு சுத்தமான காற்றும், இதயத்துக்கு நல்ல ரத்த ஓட்டமும் கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்’ என்கிறது 2011ம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்று. இந்த ஆய்வின் முடிவு ‘Medicines & Science’ இதழில் வெளிவந்துள்ளது. ரத்தத்தில் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்பட்டால் இதய நோய்களுக்கு உங்களுடைய முகவரி தெரியாது. செல்களுக்கு போதுமான ரத்த ஓட்டம் இருப்பதால் புற்றுநோய்கள் வருவதையும் தவிர்க்க முடியும். இதில் இன்னொரு விஷயம், கால் பகுதியின் முட்டியில் பர்சா(Bursa) என்ற திரவம் இருக்கிறது. நம் எலும்புகளுக்கு உராய்வுத் தன்மையை இந்த பர்சா திரவம்தான் கொடுக்கிறது. போதுமான நடைப்பயிற்சி இல்லாதபோது இந்த திரவம்தான் முட்டிப் பகுதியில் சேர்ந்து கொண்டு வலியை உண்டாக்குகிறது. காலை நடைப்பயிற்சி மேற்கொண்டால் கால்வலியைத் தவிர்க்க முடியும். எடையைக் குறைக்க இதுவே நேரம் சராசரியாக 45 நிமிடங்கள் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறவர்களுக்கு வருடத்தில் 10 கிலோ வரை எடை குறைவது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டு ள்ளது. ஏனெனில், மாலை நடைப்பயிற்சியில் அந்த நாளின் சக்தியையே செலவழிக்கிறோம். காலை நடைப்பயிற்சியில்தான் ஏற்கெனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்கிறோம். இதனால்தான் காலை நடைப்பயிற்சி எடையைக் குறைக்க நல்ல சாய்ஸ் என்கிறார்கள். மாலை வேளையில் ஓய்வு வேண்டும் என்று உடல் கேட்கும். அந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது உடலை சிரமப்படுத்துவது போன்று ஆகிவிடலாம். இரவில் கால்களிலும் உடலிலும் வலி வருவதற்கும் இது காரணமாகக் கூடும். அதனால் காலை நடைப்பயிற்சியே பக்க விளைவுகள் அற்றது. எலும்பு தொடர்பான பிரச்னைகளை குணமாக்குவதற்கும், நீரிழிவைக் கட்டுபடுத்துவதற்கும் காலை நடைப்பயிற்சியே சிறந்தது என்பதையும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. காலை நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளவர்கள் நல்ல உணவு பழக்கவழக்கங்களையும் பின்பற்றுகின்றனர் என்று கூறுகிறது இன்னோர் ஆய்வு. இதனால் இவர்களுக்கு செரிமானக் கோளாறுகளும் இருப்பதில்லை. காலை நடைப்பயிற்சியில் தசைகள் சுருங்கி, விரிந்து சீராக இருப்பதால் தசைகள் வலிமையடைந்து முதுகுவலிக்கும் நிவாரணம் உண்டு. காலை நடைப்பயிற்சி என்பது அந்த நாள் முழுவதுக்குமான எனர்ஜி என்பதால், நாள் முழுவதும் நல்ல மனநிலையுடன் செயல்பட முடியும். உடல்நலம் தவிர தன்னம்பிக்கை, சுய மதிப்பு போன்றவற்றையும் காலை நடைப்பயிற்சி தருகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. காலையில் பள்ளிக்கு நடந்து செல்லும் குழந்தைகளிடம் மன அழுத்தம் குறைந்து காணப்பட்டதையும் Medicines & Science இதழ் பதிவு செய்திருக்கிறது. நல்ல தூக்கத்துக்கான விலை காலையில் நடைப்பயிற்சிக்காக எழுவது பழக்கமானால் குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும் என்ற தகவல் தானாகவே மூளையில் பதிவாகிவிடும். இரவில் சீக்கிரமாக உறங்கினால்தான் அடுத்த நாள் எழ முடியும் என்ற பக்குவமும் ஏற்படும். இரவில் தாமதமாக சாப்பிடுவது, பின் இரவில் தூங்கச் செல்வது போன்ற தவறான பழக்கங்களும் மாறும். ஆதலால்... காதல் செய்கிறீர்களோ இல்லையோ... காலை நடைப்பயிற்சியைத் தவறாமல் செய்யுங்கள்.. ஒரு நாளை மட்டும் அல்ல... இந்த வாழ்க்கையையே மகிழ்ச்சியானதாக மாற்றி விடலாம்! நடைப்பயிற்சி எப்படி செய்ய வேண்டும்?நடைப்பயிற்சி செய்யும்போது தனியாக செல்வதே நல்லது. மற்றவர்களுடன் செல்லும்போது தேவையற்ற பேச்சுகள் உண்டாகலாம். மனதுக்குப் பிடித்த இசை கேட்டுவிட்டு செல்வதில் தவறில்லை. முடிந்த வரை செல்போன் போன்ற உபகரணங்களைத் தவிர்த்துவிடுங்கள். தளர்வான உடைகளும், வசதியான ஷூ அணிந்துகொள்வதும் முக்கியம். நடைப்பயிற்சி தொடங்கும் முன் பால், காபி, ஜூஸ் போன்ற எளிமையான உணவு வகைகள் எடுத்துக் கொள்வது அவசியம். உங்களது இயல்பான வேகம் எதுவோ, அதுவே நடைப்பயிற்சிக்குப் போதுமானது. இதய நோய்கள், ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்னைகள் போன்ற மருத்துவரீதியான சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
ஞானதேசிகன்
நன்றி: தினகரன்.

Post a Comment

Previous Post Next Post