Spiritual Information Storage

Header Ads

Saturday, September 17, 2016

சர்ப்ப தோஷம் நீக்கும் தென் காளஹஸ்தி
பரிகார தலம்!

புராணங்கள் போற்றும் பஞ்சபூத திருத்தலங் களில் ஒன்றாக, வாயுலிங்கத் தலமாக ஒளிரும் திருத்தலம் காளஹஸ்தி எனப்படும் திருக்காளத்தி. கண்ணப்ப நாயனாருக்கு அருள் வழங்கிய தலம், உத்தரவாகினியாகப் பொன்முகலி ஆறு பாயும் ஊர், ராகு, கேது ஆகிய சாயா கிரகங்கள் நல்ல கிரகங்களாக நன்மை வழங்கும் புண்ணிய க்ஷேத்திரம் என்று இவ்வூருக்கு மகிமைகள் நிறைய உண்டு. 

அதனாலேயே இவ்வூருக்குச் சென்று அங்கு உறையும் காளத்திநாதரையும் ஞானாம்பிகையையும் வழிபட்டு வருவதை பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள் பக்தர்கள்.

சரி! பொருளாதாரச் சூழல், வயோதிகம், தள்ளாமை முதலான காரணங்களால், ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்தத் தலத்துக்குச் செல்ல இயலாதவர்கள் என்ன செய்வது?!

வெகு காலத்துக்கு முன் பிச்சை எனும் சிவத்தொண்டர் ஒருவருக்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டது. ராணி மங்கம்மாளின் அரசவையில் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார் பிச்சை. சிவ பக்தரான அவர், வருடம்தோறும் மகா சிவராத்திரி தினத்தன்று, திருக்காளத்தி சென்று காளத்தியப்பரைத் தரிசித்து வழிபடுவது வழக்கம். ஆனால், வயது முதிர்ந்த நிலையில் அவரால் காளத்திக்குச் செல்ல முடியவில்லை. எனவே, சிவபெருமானை மனதில் தியானித்து, உண்ணா நோன்பு இருந்து வந்தார்.

கனவில் கிடைத்த கட்டளை!

ஒருநாள், அவர் கனவில் அந்தணக் குழந்தையாகத் தோன்றிய சிவபெருமான், ''காட்டூர் எனும் ஊர் அருகே வில்வ வனத்தில், வெள்ளை அரளி பூத்திருக்கும் மரத்தடியில், உனக்கு அருள்பாலிக்கக் காத்திருக்கிறேன். என்னை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடு'' என்று அருள்புரிந்தார்.

விழித்தெழுந்த பிச்சை, காட்டூர் சென்று ஊர் மக்களிடம் கனவு விஷயத்தைக் கூறி, அவர்களையும் அழைத்துக்கொண்டு வில்வ வனத்துக்குச் சென்றார். அங்கே, வெள்ளை அரளி பூத்திருந்த மரத்தின் அடியில் லிங்கத்திரு மேனியராக காட்சியளித்த சிவனாரைக் கண்டு சிலிர்த்துப்போன மக்கள் சிவ நாம பாராயணம் முழங்க, லிங்கத் திருமேனியை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு காட்டூருக்குச் செல்ல முற்பட்டனர். ஆனால், சிவ சித்தமோ வேறு விதமாக இருந்தது. வண்டி குறிப்பிட்ட தொலைவைக் கடந்ததும் அதன் அச்சு முறிந்தது; மேற்கொண்டு நகர முடியவில்லை.

சிவனின் சித்தம் இது என்பதை உணர்ந்து அந்த இடத்துக்கு அருகில் இருந்த ஆறுமுகப் பெருமான் கோயிலிலேயே, வேத மந்திரங்கள் முழங்க சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர். அந்த இடம்தான் தற்போது உத்தமபாளையம் என அழைக்கப்படுகிறது. திருக்காளத்திக்குச் சென்று வந்தால் கிடைக்கும் பலனை பக்தனுக்கு அருள்வதற்காக எழுந்தருளிய பெருமான் திருக்காளத்தீஸ்வரர் என்று திருநாமம் கொண்டார். தலமும் தென்காளஹஸ்தி என்று சிறப்பு பெற்றது.

ஆற்றில் பவனி வந்த அம்பாள்

மூலவர் கிடைத்த பிறகு, அம்பாளின் சிலை செய்து பிரதிஷ்டை செய்ய ஊர்மக்கள் விரும்பினார்கள். எத்தனை சிற்பிகள் முயன்றும் அம்பாளுக்கான விக்கிரகம் சரியான வடிவத்தில் அமையவில்லை. பிச்சையும், ஊர் முக்கியஸ்தர்களும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் ஒரு வெள்ளிக்கிழமையன்று இரவில் சிவனடியார் பிச்சையின் கனவில் தோன்றிய அம்பாள், ''கோயிலின் அருகில் உள்ள முல்லையாற்றில் வெள்ளம் வரும்போது, மூங்கில் கூடையில் நான் பவனி வருவேன். எனது விக்கிரஹத் திருமேனியை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டால், ஊர் செழிக்க அருள்புரிவேன்'' எனக் கூறி மறைந்தாள்.

அதன்படியே ஓரிரு மாதங்களிலேயே ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. அருகிலுள்ள கோகிலா புரம் எனும் ஊரில் நதிக்கரையில் அம்பாள் விக்கிரஹமும் கரை ஒதுங்கியது என்கிறார்கள் ஊர் மக்கள். அந்த அம்பாளையும் கோயிலில் பிரதிஷ்டை செய்து, காளஹஸ்தி அம்பிகையின் திருப்பெயரான ஞானாம்பிகை என்றே திருநாமம் சூட்டினர்.

அம்பாள் விக்கிரகம் கரை ஒதுங்கிய கோகிலாபுரத்தை அம்பாளின் பிறந்தகமாகவே கருதுகிறார்கள். எனவே, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது, இவ்வூரைச் சேர்ந்த மக்கள் அம்பாளுக்கு பிறந்த வீட்டுச் சீரும், மருமகனான சிவனாருக்கு வஸ்திரமும் சமர்ப்பிக்கும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் இத்திருத்தலத்தில் ராஜவிநாயகர், சரபேஸ்வரர், பைரவர், சோமாஸ்கந்தர், லிங்கோத்பவர், குபேரன்குபேரலட்சுமி, 63 நாயன் மார்கள் ஆகியோரையும் தரிசித்து வழிபடலாம்.

ராகு கேது பரிகாரம்

சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. ராகு பகவான் சிம்ஹிதேவியுடனும், கேதுபகவான் சித்ரலேகாவுடனும் அடுத்தடுத்த சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு நடக்கும் காலசர்ப்ப தோஷ பரிகார ஹோமத்தில் பங்கு கொண்டு வழிபடுவதுடன், ஹோமம் முடிந்ததும் தரப்படும் (ஹோமத்தில் கிடைக்கும்) ரோக சாம்பல், தேங்காய்வாழைப்பழம், நவதானியம், ராகுகேதுவின் வெள்ளித் தகடுகள் ஆகியவற்றை எடுத்துச்சென்று அருகில் உள்ள முல்லையாற்றில் இடவேண்டும். இதனால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

கண் நோய் நிவர்த்தியாகும்

கண்ணப்ப நாயனாருக்கு காளஹஸ்தி தலத்தில் சிவனார் முக்தி கொடுத்தருளியதை நினைவுகூரும் வகையில், இந்தத் தலத்திலும் காளத்தீஸ்வரருக்கும் கண்ணப்பருக்கும் சிவராத்திரியின்போது சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. கண் தொடர்பான நோய் உள்ளவர்கள் இந்த வைபவத்தில் பங்குகொண்டு ஸ்வாமிக்கும் நாயனாருக்கும் வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டால் கண் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

சகஸ்ரலிங்கம், சுரதேவர்

ஒரே லிங்கத் திருமேனியில் சிறிய அளவில் 1008 லிங்கங்களுடன் காட்சிதரும் சகஸ்ரலிங்க தரிசனம் இக்கோயிலின் விசேஷம்.

இங்குள்ள சுரதேவருக்கு ரசம் சாதம் படைத்து வழிபட்டால், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் உடல் உஷ்ண நோய்கள் நீங்கும்.

பாம்பு மற்றும் விஷப் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதுடன், பெளர்ணமி தினங்களில் இந்தக் கோயிலுக்கும் வந்திருந்து, இங்கு அருள்பலிக்கும் விஷராஜா என்ற தெய்வத்துக்கு வஸ்திரம் அணிவித்து பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இதனால் விஷத்தின் பாதிப்பு நீங்கி விரைவில் குணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் இங்கு பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, மகாலட்சுமி, ஆகியோருடன் காளி தேவியும் சேர்ந்து அஷ்ட மாதர்களாகத் தரிசனம் தருவது விசேஷ அம்சம்.

மேற்கூரையில் காலச்சக்கரம்

இங்குள்ள அர்த்தமண்டப விதானத்தில் வாஸ்து பிரம்மாவையும், அவரருகே இடது கையில் வீணையை மீட்டும் நிலையில் சரஸ்வதியையும், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்களையும் தரிசிக்கலாம். அதைச் சுற்றி சதுரமான வடிவில் 12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மிருகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பிறந்த தேதி, ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்திருந்தவர்கள், இந்த காலச் சக்கரத்தின் மூலம் தற்போதைய கிரக நிலை, தோஷ விபரங்கள், திருமணப் பொருத்தம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்!

எப்படி செல்வது?

தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது உத்தமபாளையம். அங்குள்ள பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது கோயில்.

Thanks Vikatan
Back To Top