Spiritual Information Storage

Header Ads

Sunday, September 11, 2016

சித்தர்கள் பயன்படுத்திய சித்துக்கள்
சிவன்பால் அன்பு கொண்டு தன்னிலை மறந்து சிவத்தில் லயித்திருக்கும் அற்புதமான நிலையைப் பெற்றவர்கள் அனைவரும் சித்தர்கள் என்று போற்றப்படுகின்றனர். அதிலும் மிகுந்த சக்தியைப் பெற்றவர்கள் பல்வேறு சித்துகளை நிகழ்த்தியுள்ளனர். ஆனாலும் தங்களுக்குள்ள சித்து என்னும் மகா சக்தியை தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

சித்தர்கள் தங்கள் வல்லமையால் பொருட்களை உருவாக்கவும், வரவழைக்கவும் ( போலிகளின் மாயம், மந்திரம், தந்திரம் வேறு) செய்வார்கள்.

தாங்கள் எண்ணுகின்ற எதையும் அவர்களால் செய்ய முடிந்தது. உயிருள்ளவற்றையும் தமது சக்தியால் அவர்கள் வரவழைப்பார்கள். 

உயிரற்ற மனித உடலுக்கு உயிர் கொடுப்பார்கள், அவர்கள் ஒன்றை வேறொன்றாகவும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள். 

சித்தர்களுக்கு அவையெல்லாம் அற்ப சமாச்சாரங்கள், நமக்கோ அவையெல்லாம் அற்புதங்கள்.

அந்த வகையில் சித்தர்கள் பெற்ற சக்திகளை அஷ்டமாசித்துக்கள் என்று கூறுவார்கள். அணிமா, மஹிமா, லஹிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற பெயர்களில் சித்துவிளையாட்டுகளில் ஈடுபட்டனர். அந்த வகையில் அவர்கள் பயன்படுத்திய சித்துகளின் மூலம் என்னென்ன செய்தார்கள் என்பதை எளிமையாக பார்ப்போம்.

அணிமா:

பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது ஆக்குவது. ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

மஹிமா:

சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

லஹிமா:

கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது. திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

கரிமா:

இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

பிராத்தி:

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம்:

வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல். அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்:

ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்:

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல். திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

http://www.aanmeegamalar.com/view-article/ஆன்மீகம்/2422

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top