Spiritual Information Storage

Header Ads

Monday, November 14, 2016

கார்த்திகை தீபம்


கார்த்திகை மாத பௌர்ணமி திதியில் வரும் நாள் கார்த்திகை தீப திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அக கண்களால் மட்டுமே காணக்கூடிய ஜோதி வடிவான ஏக இறைவனை புறக்கண்களால் காண ஈசன் செய்த திருவிளையாடலே கார்த்திகை தீபம். “ஆடிப்பாடி அண்ணாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே” என்று மனமுருகி பாடியுள்ளார் அப்பர்.


சரி ஈசன் ஆடிய அந்த திருவிளையாடல் தான் என்ன? 


ஒரு முறை படைப்பின் மூர்த்தியான பிரம்மாவிற்கும், காக்கும் மூர்த்தியான விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி தலை தூக்கியது. போட்டி பொறாமையாக உருவெடுத்தது. தங்களுக்குள் பெரியவர் யார் என்பதை நிரூபிக்க கடுமையாக போட்டி போட்டு கொண்டிருந்த சமயம். இவர்களின் இந்த அவசியமில்லாத ஆணவத்தை அடக்கி, உண்மையில் உயர்ந்த இணையற்ற பரம்பொருள் யார் என்பதை நிரூபிக்க ஒரு திருவிளையாடலை ஈசன் அரங்கேற்றினார். இருவரில் யார் தன் முடியையும், அடியையும் காண்கிறார்களோ அவர்களே உங்களில் பெரியவன் என்றார். பிரம்மன் அன்னம் உருவம் எடுத்து விண்ணில் பறந்து ஜோதி வடிவமான ஈசனின் தலை முடியை காண விரைந்தார். விஷ்ணுவோ வராஹ அவதாரம் எடுத்து பரம்பொருளின் திருவடியை காண சென்றார். வெகு நாட்கள் ஆகியும் விஷ்ணுவால் அடியை காண முடியவில்லை. இவர் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பதை புரிந்துகொண்ட விஷ்ணு ஈசனிடம் சரணாகதி அடைந்து, இவரே உயர்ந்தவர் என்பதை ஏற்றுகொண்டார்.
மறுபுறம் பிரம்மனோ எப்படியாவது ஈசனின் முடியை கண்டுவிடவேண்டும் என்று பறந்து கொண்டே இருந்தார். பல நாட்கள் ஆகியும் முடியை காண முடியாத நிலையில் சோர்வடைந்தார். அப்போது ஜோதி வடிவமான ஈசனின் மேனியில் இருந்து ஒரு தாழம்பூ இறங்கி வருவதை கண்டார். தாழம்பூவிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என்று வினவ.... அது தான் ஈசனின் தலை முடியில் இருந்து வருவதாகவும், பல யூகங்கள் பயணம் செய்தும் இன்னும் பூமியை காண முடியவில்லை என்றும் கூறியது. திகைத்துப்போன பிரம்மா தாழம்பூவிடம் ஒரு வேண்டுதல் விடுத்தார். தாழம்பூ ஈசனின் உச்சி முடியில் இருந்ததாகவும், அதை பிரம்மன் கண்டுவிட்டதாகவும் போய் சாட்சியம் சொல்லும்மாறு கேட்டுக் கொண்டார். நான்முகனின் வேண்டுகோளுக்கு இணங்க தாழம்பூவும் அவ்வாறே பொய் சாட்சியம் உரைத்தது. முக்காலமும் உணர்ந்த, உண்மையை அறிந்த மும்மூர்தியின் தலைவன் ஈசன் கடும் கோபம் கொண்டார். அதுவரை ஜோதி ரூபமாக இருந்தவர், அக்னி பிழம்பாக அனலை கக்கினார். அனலின் தாக்கத்தில் மூன்று உலகமும் சிக்கி பெரும் இன்னல்களுக்கு ஆளானது. சிவனின் மேனியில் இருந்த அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், அக்னி யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என அனைவரும் அக்னியின் தாக்கத்தால் வெளியேறினார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் பார்வதியிடம் தஞ்சம் அடைந்தனர். தேவி பார்வதியின் கருணை மொழியால் சாந்தம் ஆனார் ஈசன். தனது அக்னிபிழம்பு வடிவத்தை மாற்றி மீண்டும் ஜோதி ரூபத்தில் திருவண்ணாமலை மீது அனைவருக்கும் காட்சி அளித்தார். இந்த சம்பவம் நடந்தது கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளன்று. அதுவே கார்த்திகை திருநாளாக இன்றும் கொண்டாடப்படுகிறது. மலையாய் அமர்ந்த மகாதேவன். அடி - முடிகாண முடியா வண்ணம் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் காட்சித்தந்து அவர்கள் அறியாமையை நீக்கி சிவபொருமான் நெருப்பு ஜோதியாய் காட்சித் தந்து அண்ணாமலையாக அருள்பாலித்த திருநாள் திருக்கார்த்திகை திருநாள் ஆகும். கார்த்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடைந்தார். 


கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது நாம் சொல்லவேண்டிய மந்திரம்.


கீட: பதங்கா மதகாஸ்ச வ்ருதாஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந:
பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.


இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால், இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. அங்கு குடியிருக்கும் அண்ணாமலையானை தொழுது, தீப திருநாளாம் கார்த்திகை திருநாளில் பரம்பொருளிடம் சரணண்டைந்து, புறக்கண்களால் கண்டு மகிழ்ந்த ஜோதியினை, அகக்கன்களாலும் கண்டு, ஈசனடி சேர்வோமாக.... ஓம் நமச்சிவாய.

நன்றி வாட்ஸ்அப் நண்பர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top