Spiritual Information Storage

Header Ads

Sunday, December 11, 2016

தீய சக்திகளை விரட்டும் தீப வழிபாடு


சுபமங்களகரமான கார்த்திகை மாதத்தில், பிரகாசமான பவுர்ணமி திதியில் கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்து வருவதால் மகா தீப திருநாளானது பெரிய கார்த்திகை என்றும் அண்ணாமலை தீபம் என்றும் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது என்பது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தீப ஜோதி தரிசனத்தின் மகிமையை பலவாறாக நமக்கு போதித்து அருளியுள்ளார். வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகையின்போது வீடுகளில் வரிசையாக விளக்கு ஏற்றுவார்கள். தெற்கே மகா கார்த்திகை தீபத்தின்போது அகல் விளக்கேற்றி கொண்டாடுகிறோம்.

அறிவு என்ற ஞானம் வரும்போது அறியாமை என்ற இருள் அகல்கிறது என்பதே தீப தரிசனத்தின் தத்துவமாகும். அகல், எண்ணெய், திரி, சுடர் என்ற நான்கும் ஒன்று சேரும்போது விளக்கு ஆகின்றது. இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப்படுவதாகும். இந்த அறிவொளியையே தீப சக்தியாக வணங்குகிறோம். சிவன் கோயில்களில் கருவறையை சுற்றி வலம் வரும்போது சன்னதிக்கு நேர் பின்னால் லிங்கோத்பவரை (அண்ணாமலையார்) தரிசிக்கலாம். அதில் சிவபெருமான் உச்சி, பாதத்தை காண முடியாது.

‘அடி, முடி காண முடியாத பெருமானே சிவன்‘ என்பதை உணர்த்துவதே லிங்கோத்பவர் வடிவம். சிவபெருமானின் அடியையும் முடியையும் கண்டு விடுவதாக பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் கூறுகிறார்கள். விஷ்ணு பன்றி வடிவம் எடுத்து, பாதாளத்தை தோண்டிச் செல்கிறார். பிரம்மா அன்னப் பறவை வடிவெடுத்து சிவனின் முடிதேடி உயரே பறக்க ஆரம்பிக்கிறார். இருவரும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆண்டுகள், யுகங்கள் ஓடுகின்றதே தவிர, சிவனின் அடி, முடியை காண முடியவில்லை.

பல யுகங்கள் முன்பு சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூவை வழியில் சந்திக்கும் பிரம்மா, சிவனின் முடியை தான் பார்த்ததற்கு தாழம்பூவை பொய் சாட்சியாக்கினார் என்பது புராணக்கதை. அடி, முடி காண முடியாதவன் சிவபெருமான் என்பதை விஷ்ணுவும் பிரம்மாவும் உணர்கிறார்கள். அடிமுடியற்ற ஜோதி சொரூபனாக அவர்களுக்கு சிவபெருமான் காட்சி தந்த திருத்தலம் திருவண்ணாமலை. அதை கொண்டாடும் வகையிலேயே மகா கார்த்திகை தீப திருநாளன்று திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மற்ற சிவாலயங்களிலும் தீபஜோதி பூஜைகள் விமர்சையாக நடக்கின்றன.

இதையடுத்து சொக்கப்பனையும் கொளுத்தப்படும். கம்புகளையும் பனை ஓலைகளையும் கொண்டு கோபுரம்போல அமைத்து அதில் பட்டாசு, வெடிகள் கட்டி கொளுத்தி விடுவார்கள். கொழுந்துவிட்டு எரியும் ஜோதி வடிவில் சிவபெருமானை தரிசிப்பதே இதன் தாத்பர்யம். திருவண்ணாமலையில் தீப திருவிழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முதலில் கோயிலில் பரணி தீபம் ஏற்றிவிட்டு, பின்னர் மலையில் மகாதீபம் ஏற்றுவார்கள். அவரவர் வீட்டு வழக்கம் மற்றும் ஊர் வழக்கப்படி வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள். சிலர் கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைப்பார்கள்.

தீபத் திருநாளில் சிவனையும், முருகனையும் நினைத்து விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் செய்து நடுவாசல், வராண்டா, கைப்பிடி சுவர்கள், வாசற்படி, துளசி மாடம் என எல்லா இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். வீடுகள், தெருக்கள் தோறும் விளக்குகள் பிரகாசிப்பதால் அனைத்து இடங்களும் ஜோதிமயமாக, மங்களகரமாக காணப்படும். கார்த்திகை மாதமே சிவன், முருகனுக்கு சிறப்பு என்பதால் இந்த மாதம் முழுவதும் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு. ஓம் சிவ சிவ ஓம், அருணாசல சிவ, அருணாசல சிவ, அருண ஜடா என்று சிவநாமம் சொல்லி பூஜை செய்து வடை, பாயசம் மற்றும் பொரியுடன் வெல்லம் சேர்த்து உருண்டை செய்து படைப்பது சிறப்பு.

தினை மாவில் விளக்கு ஏற்றி வழிபடுவதும் விசேஷம். குத்து விளக்கின் ஐந்து முகங்களும் பெண்களின் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை ஆகியவற்றை குறிப்பதாக ஆன்றோர்கள் சான்றோர்கள் சொல்வார்கள். திருக்கார்த்திகை நாளன்று குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றி வழிபடுவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். நம் மனத்தில் அஞ்ஞானம் அகன்று, மெய்ஞானம் தோன்றும். ஜாதகத்தில் உள்ள கிரக தோஷ பீடைகள் அகலும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் தீய சக்திகள் மற்றும் ஏவல், பில்லி, சூனியம் போன்றவை விலகி ஓடும். மனம் ஆன்மிக பரவசத்தில் திளைக்கும். இந்த திருக்கார்த்திகை நம் வாழ்வில் மகிழ்ச்சியான மாற்றங்களை தரவேண்டும் என ஜோதி சொரூபனான சிவபெருமானை பிரார்த்திப்போமாக. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top