தியானம் என்பது


அது ஒரு மிகப்பெரிய புத்த மடாலயம். அந்த மடாலயத்துக்குள் பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று இருந்தது. அந்த புத்தரின் சிலை கைகளை உயர்த்தி அருள்பாலிப்பது போல் இருக்கும். ஒரு வயதான துறவி தினமும் அந்த புத்த மடாலயத்துக்கு வந்து, புத்தரின் சிலை முன்பாக நீண்ட நேரம் அமர்ந்திருப்பார். அவர் அப்படி அமர்ந்திருக்கும் நேரம் முழுவதும், துறவின் பார்வை புத்தரின் முகத்தை நோக்கியபடியே இருக்கும். அந்த காட்சியைப் பார்ப்பவர் களுக்கு, அவர்கள் இருவருக்கும் ஏதோ உரையாடல் நடப்பதைப் போலத் தெரியும். துறவி தினமும் வருவார், புத்தரின் முன்பாக நெடு நேரம் அமர்ந்து முகத்தை நோக்கியபடி இருப்பார். பிறகு எழுந்து சென்று விடுவார். இதனை அந்த மடாலயத்தின் தலைமை குரு கவனித்துக் கொண்டே இருந்தார். அன்றும் வழக்கம் போல் வந்த துறவி, தன்னுடைய செயல்களை சரியாகச் செய்து விட்டு எழுந்து செல்ல எத்தனித்தார். அப்போது அவரை எதிர்கொண்டார் மடாலயத்தின் தலைமை குரு. ‘ஐயா! உங்களை தினந்தோறும் இங்கு பார்க்கிறேன். நெடுநேரம் தியானம் செய்கிறீர்கள். புத்தரின் முகத்தை நோக்கியபடியே இருக்கிறீர்கள். புத்தர் உங்களிடம் என்ன சொன்னார்?’ என்று கேட்டார்.

அதற்கு அந்தத் துறவி, ‘புத்தர் எப்போதும் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்’ என்றார் அந்த துறவி.

மடாலய குருவுக்கு ஆச்சரியம். ‘அப்படியா! அது சரி.. அவரிடம் நீங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.

‘நானும் எதுவும் சொல்ல மாட்டேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்றார் துறவி.

அவரது பதிலில் இருந்து உண்மையை அறிந்து கொண்டார் மடாலய குரு.

ஆம்! தியானம் என்பது எதையும் யாசிப்பது அல்ல. தனக்குள் மூழ்கி, தன்னைத்தானே அறிந்து கொள்வதே ஆகும். மவுனம் என்பது பேச்சை நிறுத்துவது என்பதல்ல. அது ஒரு நிசப்தமான சங்கீதம். இதைத் தான் பாரதியார், ‘தனிமையுண்டு அதிலே சாரம் இருக்குதம்மா’ என்றார்.

நன்றி | தினத்தந்தி

Post a Comment

Previous Post Next Post