Spiritual Information Storage

Wednesday, July 12, 2017

இஷ்ட காமேஸ்வரி ஆலயம்

மனித வாழ்வின் லட்சியங்கள் நான்கு என்று வரையறுக்கிறது சாஸ்திரம். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகியனவே அவை. இவற்றுள் முதன்மையானதும் முதலில் தேட வேண்டியதும் தர்மம் ஆகும். தர்மவழியிலேயே அர்த்தம், அதாவது பொருளைத் தேட வேண்டும், தர்மத்தை ஒட்டியதாகவே காமனைகள் இருக்க வேண்டும், தர்மத்தாலேயே மோக்ஷம் தேடப்பட வேண்டும் (மோக்ஷம் என்பது தர்மார்த்தகாமங்களைத் தாண்டிய நிலையானாலும் கூட).

நமது தார்மீகமான காமனைகள் அல்லது ஆசைகளை நிறைவேற்றவே நாம் அர்த்தத்தைத் தேடுகிறோம், பாடுபட்டு உழைக்கின்றோம், இறையுதவியைத் தேடி விடாது பிரார்த்திக்கின்றோம். அவ்வாறு வழிபாடு புரியும் பக்தர்களின் காமனைகளைப் பூர்த்தி செய்யும் தெய்வமே இஷ்ட காமேச்வரி தேவி.

இந்த அன்னையின் ஆலயம் ஸ்ரீசைலத்திற்கு அருகில், சுமார் twenty கிமீ தொலைவில் கானகத்தில் நடுவில் உள்ளது. செல்லும் பாதை முழுவதும் இயற்கையெழில் கொஞ்சி விளையாடுகிறது. ஸ்ரீசைலத்திலிருந்து ஆலயத்திற்கு ஜீப் மூலம் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். கரடுமுரடான பாதையில் ஜீப் குதித்துக் குதித்துச் செல்கிறது.

ஆலயத்தின் அருகில் பாறையினைச் செதுக்கிய விநாயகர் விக்கிரகத்தை வணங்குகிறோம். அதோ ஆலயம் தெரிகிறது. இது 8ஆம் அல்லது 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோயில். இப்போது மேலாகக் கட்டுமானம் செய்திருக்கிறார்கள். நுழைவாயில் சிறியது தான்.

ஆலயத்தில் அன்னை சாந்தமாக அமர்ந்திருக்கிறாள். மிக நூதனமான மூர்த்தி. இத்தகைய மூர்த்தி வேறு எங்குமே இல்லை எண்று பெருமையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள். பத்மாசனத்தில் தவக்கோலத்திலிருக்கிறாள். மேலிரு கைகளில் அங்குசந்தாங்கியிருக்கிறாள். கீழிடக் கையில் லிங்கம் வைத்துக் கொண்டு, கீழ்வலக் கையில் ஜபமாலையும் மலரும் வைத்துக் கொண்டு லிங்கத்திற்குப் பூஜை செய்கிறாள்.

அர்ச்சகர் நம்மையே அம்பிகையின் நுதலில் மஞ்சள் சார்த்துமாறு கூறுகிறார். மகா பாக்கியம் என்று மாதாவின் நெற்றியில் மஞ்சளைத் தடவுகிறோம். குபீர் என்று அதிர்ச்சியும் ஆனந்தமும் நம்முள் அலையலையாகப் பாய்கின்றன. உடலில் ரோமாஞ்சனமும் ஆனந்தக் கண்ணீரும் பூக்கிறது. ஆம், அன்னையின் நெற்றியை ஸ்பரிசிக்கையில் கருங்கல்லைத் தொடுவது போலில்லை, ஜீவனுள்ள மனிதவுடலைத் தீண்டுவதைப் போன்றேயுள்ளது. உயிர்ப்பும் துடிப்புமான தெய்வமல்லவா அன்னை பரமேச்வரி! பரவசம் உடலுயிர் தாண்டி ஆத்மா வரை பாய்கிறது.

இருமுறைக்கும் மேல் இங்கு வந்திருக்கிற பக்தர்கள் அதிகம். இன்னும் தங்கள் இஷ்டங்களையெல்லாம் நிறைவேற்றி வைக்கும் அன்னையைக் காணப் பலமுறை வந்துகொண்டேயிருக்கிறார்களாம்! அவள் நிகழ்த்தும் அற்புதங்களைப் பக்தர்கள் சுற்றம், நட்பு வட்டங்களில் பரப்ப, அவர்களும் தேவியைத் தேடி வருகிறார்கள். ஆனால் இந்த அன்னை அழைக்காமல் யாரும் அவளைத் தரிசித்து விட முடியாது என்று உறுதியாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

தன் குழந்தைகளின் இஷ்டங்களைப் பூர்த்தி செய்வதற்கென்றே தவத்திலாழ்ந்திருக்கும் தயாபரியாம் இஷ்ட காமேச்வரித் தாயைத் தரிசித்து இகபர நலன்களும், தர்மத்திலேயே திளைத்த சிந்தையும், தேசத்தின் வளமையும் சாந்தியும் வரமாகப் பெற்றுய்வோம் வாருங்கள்!

Read More  http://mytempleapp.com/ta/srisailam